விவசாயிகளையும் ஏழைகளையும் மோடி அரசு கைவிட்டது ஏன்? எழுதியவர்-தோழர் அ.மார்க்ஸ்

மத்திய அரசின் முடிவுகள் தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன

சொல்வதற்கு எத்தனையோ உள்ளன. இவர்களின் இந்துத்துவ அஜென்டா பற்றி நான் இங்கு பேசப்போவதில்லை. பொருளாதாரம், விவசாயம் முதலான துறைகளில் இந்த மூன்றாண்டுகளில் என்ன நடந்துள்ளது என்பதை மட்டும் சுருக்கமாகக் காணலாம்.

இந்த ஆண்டின் (2016-17) நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வீதம் 6.1 ஆகக் குறைந்துள்ளது என்கிற உண்மை சமீபத்தில் வெளிவந்து உலக அளவில் கவனம் பெற்றது. இது “மோடியின் மூன்றாண்டு சாதனை”யைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்குப் பெரிய சங்கடத்தை விளைவித்துள்ளது. அருண் ஜேட்லி ஒரு வேளை திறமையான வழக்குரைஞராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு திறமையான பொருளாதார நிர்வாகியல்ல என்பது உறுதியாகிவிட்டது. இந்த GDP வீழ்ச்சி உலக அளவிலான பொருளாதாரத் தேக்கத்தின் விளைவு என அவர் சமாளிக்க முனைந்தது எடுபடவில்லை. இதே காலகட்டத்தில் சீனாவின் GDP வளர்ச்சி 6.9 ஆக உள்ளதை அவரால் விளக்க இயலவில்லை.

கடந்த இரண்டாண்டுகளிலும் இந்த GDP வளர்ச்சி குறித்து மோடி அரசு கூறி வந்தவற்றிலும் உள்ள பிரச்சினைகளையும் பொருளாதார வல்லுனர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். 2012 -13ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு அப்போது 5.1 சதமாக இருந்த GDP வளர்ச்சி தங்களது சாமர்த்தியத்தால் 2015 -16 இல் 7.9 சதமாக அதிகரித்துள்ளது என அவர்கள் கூறியதை அப்போதே மும்பையில் உள்ள Indira Gandhi Institute for Development Research ஐச் சேர்ந்த பேரா ராஜேஸ்வரி சென்குப்தா தவறு என அம்பலப்படுத்தினார். 2015-16 ஆம் ஆண்டுக்கான GDP வளர்ச்சி வீதம் வெறும் 5 சதம்தானே ஒழிய 7.9 சதம் அல்ல என அவர் நிறுவிக் காட்டினார். சேவைத்துறையில் நிகழ்ந்துள்ள discount inflationஐ மறைத்துக் கணக்கிட்டதன் விளைவுதான் இந்த 7.9 சத “அதிகரிப்பு” என அவர் சுட்டிக் காட்டியபோது அவர்கள் வாய் திறக்கவில்லை.

இதையும் படியுங்கள்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் தகவல்கள் ஏன் பிழையானவை?

GDP வளர்ச்சிக் கணக்கீட்டில் மட்டும் அவர்கள் இந்த “ஃப்ராடை” ச் செய்யவில்லை. தமது ஆட்சியில் தொழில் உற்பத்தி பெருகியுள்ளது எனக் காட்டுவதிலும் அவர்கள் இதேபோல ஒரு ஏமாற்றைச் செய்தனர். இந்தக் கணக்கீட்டைச் செய்வதற்கான அடிப்படை ஆண்டு (base year) 2004 -05 என்பதை அவர்கள் தன்னிச்சையாக 2011 -12 என மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக தொழில் வளர்ச்சி 1.96 சதமாக இருந்தது 4.1 சதம் எனக் காட்டப்பட்டது. இதே போல அடித்தள ஆண்டை மாற்றிக் கணக்கிட்டால் UPA ஆட்சியிலும் கூட தொழில் வளர்ச்சி வீதம்) 0.5 சதம் என்பது 3.35 சதமாக ஆகியிருக்கும்.

தற்போது வெளிவந்துள்ள இந்த GDP வளர்ச்சி பற்றிய விவரங்கள் சொல்லும் பிற தகவல்களும் கவலை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. கனிம வளங்களைத் தோண்டிக் கொட்டுவதில் மட்டும்தான் மூன்றாம் கால் பகுதியைக் காட்டிலும் இப்போது இந்தியா தன் சாதனையை அதிகரித்துள்ளது. மற்றபடி விவசாயம், மீன்வளம், உற்பத்தி, கட்டுமானப் பணிகள், வணிகம், ஓட்டல் தொழில், ட்ரான்ஸ்போர்ட் என எல்லாவற்றிலும் இந்திய உற்பத்தி இப்போது குறைந்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் (organised sector) கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பதிலும் முந்தைய மன்மோகன் அரசின் கடைசி மூன்றாண்டுகளோடு ஒப்பிடுகையில் மோடி அரசு அதில் பாதியைக்கூட எட்டவில்லை. தொழிலாளர் நல அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடும் புள்ளி விவரங்கள் மோடி அரசுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. அமித் ஷா தங்கள் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகையாளர்கள் இது குறித்துக் கேட்க அவர், “125 கோடி மக்களுக்கும் எங்களால் வேலை கொடுக்க இயலாது” என அவர் திமிரடியாகப் பதில் சொன்னதோடு கூடவே, “சுய வேலைவாய்ப்புதான் சிறந்த வழி” என்றார். அதாவது ‘எல்லாத்துக்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காதே. உன் வேலையை நீதான் தேடிக்கணும்’ என்பதுதான் மோடி அரசின் எதிர்வினை.

இதையும் பாருங்கள்: நந்தினி

உண்மையில் கடந்த பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு வளர்ச்சி என்பது இப்படியான சுய தொழில்களில்தான் ஏற்பட்டு வருகிறது. சமீப காலங்களில் உருவாகியுள வேலைவாய்ப்புகளில் 50% இப்படித்தான் ஏற்பட்டுள்ளது. அதுவும் அமைப்பாக்கப்படாத துறைகளில்தான் (unorganised sectors) இதுவும் சாத்தியமாகிறது. மொத்த தொழிலாளரின் எண்ணிக்கை 48 கோடி. இதில் 85 சதம் இப்படியான துறைகளில்தான் உள்ளன. இப்படியான தொழில்களில் உள்ளவர்களில் 5 சதம் பேரே முறையான தொழிற்பயிற்சி (skilled labour) பெற்றவர்கள் என அரசே கூறுகிறது. மற்ற 95 சதத்தினரும் எந்த அளவிற்குச் சுரண்டப்படுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

சுருங்கச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம். வேலையில்லா வளர்ச்சி (jobless growth) என்பது ஒரு பக்கம்; வளர்ச்சியே இல்லை என்பது இன்னொரு பக்கம்.

விவசாயத்துறையிலும் நிலைமை இதுதான். விவசாயப் பொருளியல் வல்லுனர் அஷோக் குலாத்தியின் கூற்றுப்படி, “மூன்றாண்டு கால NDA ஆட்சியில் விவசாய வளர்ச்சி 1.7%. ஆனால் கடைசி மூன்றாண்டுகளில் UPA ஆட்சியில் விவசாய வளர்ச்சி வீதம் 3.5%”. தமது ஆட்சியில் விவசாயிகளுக்கு 50 சத லாபம் உறுதி செய்யப்படும் என வாக்களித்த நரேந்திர மோடி இப்போது இது பற்றி வாயே திறப்பதில்லை. 2022 இல் இதைச் சாத்தியமாக்குவோம் என விவசாய அமைச்சகம் கூறியது. அப்படியாயின் ஆண்டுதோறும் 10 முதல் 12% சத வருமான அதிகரிப்பு இருக்க வேண்டும். சமீபத்தில் மோடியின் நிதி ஆயோக் அதுவும் சாத்தியமில்லை எனக் கைவிரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: சமூக வலைத்தள அரசியல்: அராஜக அரசியல்

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பின் விளைவுகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. இந்தக் காலாண்டில் ஏற்பட்டுள்ள GDP வீழ்ச்சி இதற்கொரு நிரூபணம். வங்கிக் கடன் வளர்ச்சி கடந்த ஆறு மாதங்களில் வெறும் 4 சதம்தான். கடந்த 60 ஆண்டுகளில் இதுதான் மிக மிகக் குறைந்த வளர்ச்சி. பண மதிப்பீட்டிழப்பு மூலம் வங்கிகளில் பணம் குவியப் போகிறது, இதனால் கடன் அளிக்கும் நிலை அதிகரிக்கும் என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. தனியார் முதலீட்டு அதிகரிப்பும் நடக்கவில்லை.

மோடி அரசின் இன்னொரு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதி கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவது. ஸ்விஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் கொண்டுவந்து எல்லோருடைய வங்கிக் கணக்கிலும் செலுத்துவதாகச் சொன்ன அபத்தங்களைக்கூட விட்டுவிடுவோம். இது வரைக்கும் கறுப்புப்பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென எந்த உருப்படியான சட்டத்தையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு மூலம் கறுப்புப் பணம் எல்லாம் வந்து கொட்டப் போகிறது என்பதும் நடக்கவில்லை. ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் வரி’ என ஒரு வரி விதிப்புத் திட்டத்தையும் மோடி அரசு வெளியிட்டது. 500 /1000 ரூ நோட்டுகளை வங்கியில் வைப்பு செய்தவர்கள் தங்களின் கறுப்பு வருமானத்தை ஒத்துக் கொண்டால் அவர்களுக்கு 50 சத வரிச்சலுகை அளிக்கப்படும் என்பதுதான் அந்தத் திட்டம். இதன் மூலம் மார்ச் 31, 2017 வரை அதிகபட்சமாகத் தேறியது 2,500 கோடி ரூதான்.

இதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

பணமதிப்பீட்டு இழப்பின் எதிரான விளைவுகள் தீரும் முன்னரே GST வரி செயல்படுத்தப்பட்டுவிட்டது. சிறு வணிகர்களை இது பெரிய அளவில் பாதிக்கப் போவது மட்டுமின்றி பண வீக்கம் அதிகரிப்பதற்கும் இது காரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வங்கி வட்டி வீதத்தை அதிகரித்தது இன்னோரு பக்கம் அகக் கட்டுமான வளர்ச்சியைப் பாதித்துள்ளது. கார்பொரேட்கள் பலவும் தம் அகக்கட்டுமானத் திட்டங்களைக் கைவிட்டுத் தம் மூலதனங்களை வெளிநாடுகளில் ‘டெபாசிட்’ செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் 880,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறுத்திக்கொள்ளப்பட்டன.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டுள்ள நரேந்திர மோடி முதலீட்டு இலக்காக இந்தியாவை இந்த நாடுகளில் விற்றுக் கொண்டுள்ளார் எனவும் இந்த அம்சத்தில் அவர் வெல்ல முடியாத “விற்பனையாளராக” (salesman) உள்ளார் எனவும் (Harsh V Pant, A passage through Europe, The Hindu, June 6, 2017) எனவும் அரசியல் நோக்கர்கள் எழுதிக்கொண்டுள்ள நிலையில் உள்நாட்டு மூலதனங்கள் இப்படி வெளிநாடுகளை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்: அரசியலுக்கு வருவது எப்படி?

மாடு விற்பனை தொடர்பாக பாஜக அரசு வெளியிட்டுள்ள ஆணை மாட்டுக்கறி ஏகபோக விற்பனையாளர்களுக்குச் செய்யப்பட்டுள்ள சலுகையாகத்தான் தெரிகிரது., இதன் இன்னொரு பக்கம் ஏழை எளிய மாட்டுக்கறி விற்பனையாளர்கள் மட்டுமல்ல விவசாயத்திற்காகவும் பால் விற்பனைக்காகவும் மாடுகளை வைத்துள்ள எளிய விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான் என்பதை இப்போது பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

மாடுகள் வைத்திருப்போருக்கான வருமானம் பால், எரு, தோல், இறைச்சி ஆகியவற்றின் விற்பனையின் ஊடாகக் கிடைக்கிறது. இதில் இறைச்சி மூலம் கிடைக்கும் வருமானம் 40% . ஒட்டுமொத்தமாக எருமை இறைச்சியின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 26,685 கோடி ரூபாய். இன்று பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள இந்த கட்டுப்பாடுகள் பெரிய அளவில் விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது.

இதையும் படியுங்கள்: பிளாக்மெயில் தர்பார்

அது மட்டுமல்ல இனி அநாதையாக்கப்பட்ட கோமாதாக்கள் தெருக்களில் அலைவதும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதும், காகிதம், கழிவுகள் எல்லாவற்றையும் பொறுக்கித் தின்று அலைவதும் வழக்கமாகப் போகிறது.

ஒன்றைச் சொல்லி முடிக்கலாம். இத்தனைக்கும் அப்பால் மோடி அரசு தொடர்ந்து இடைத் தேர்தல்களில் வெற்றி நாட்டிக் கொண்டுள்ளது என்றால் அது உண்மையில் மோடி அரசின் சாதனைகளால் அல்ல. முழுக்க முழுக்க அது எதிர்க்கட்சிகளின் தோல்வியைத்தான் காட்டுகிறது. மோடி அரசின் இந்தத் தோல்விகளை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கோ, போராட்டங்களை நடத்துவதற்கோ திராணியற்றவைகளாக எதிர்க் கட்சிகள் இருப்பதுதான் மோடி அரசின் மிகப்பெரிய பலம்.

பின்னூட்டமொன்றை இடுக